புதிய டிஜிட்டல் அடையாள அட்டை! தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
இந்தியாவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன(Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது 100 வீதம் பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் முறையில் கைரேகைகள் பதிவு
இந்த அடையாள அட்டையை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படும் என்றும் அதில் 50 சதவீதத்தை இந்திய உதவியுடன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைரேகை, முகம் மற்றும் கண் கரு வளையம் ஆகியவற்றை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்படும் என்றும், காகிதத்தில் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கைரேகைகள் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசின் முன்னுரிமைப் பணி என்றும், காணி பரிவர்த்தனைகளில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அதை முறையாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் போது பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு செய்ய வேண்டும் என கூறப்பட்டாலும், இன்று அந்த நிலை மாறி அரசு அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
முறைப்படி அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை இம்மாதம் முதல் அறிமுகப்படுத்தி அடுத்த மாதம் முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே அடையாள அட்டைகளைப் பெற்ற நபர்களுக்கு புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.