இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: கடற்றொழில் அமைச்சர் பகிரங்க கருத்து
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"பேச்சுவார்த்தைகள் அனைத்தும், முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.
இருதரப்பு பேச்சுவார்த்தை
அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது.
மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை” என்றார்.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் போக்குவரத்து அதிகாரிகளை சந்தித்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
போக்குவரத்து பிரச்சினை
இன்றையதினம் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எமக்கு எடுத்துக் கூறியிருந்தனர். அதில் முக்கியமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய போக்குவரத்தாகும்.
யாழில் உள்ள போக்குவரத்து பிரச்சினை என்பது, இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து துறைக்கும் இடையே முரண்பாடாக மாறி வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிக செலவில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது இன்றைக்கு ஆளில்லாத அநாதையாக்கப்பட்ட இடமாக உள்ளது” என்றார்.
இந்நிலையில், தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.ரி.கே.இராஜேஸ்வரன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இவ்வாறான 82 கூட்டங்கள் இரவு பகல் என ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த காலப்பகுதியில் பல பொது முகாமையாளர்கள் நியமனம் பெற்று வந்தார்கள். எனினும், அவர்கள் நடாத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என அமைச்சரிடம் இராஜேஸ்வரன் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |