கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படமாட்டாது! சுனில் வட்டகல
இலங்கையின் சிறைச்சாலைகளில் இனிவரும் காலங்களில் எந்தவொரு கைதிக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என பிரதியமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) வலியுறுத்தியுள்ளார்.
வார இறுதி ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான விடயத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் செயற்படும்.
கைதிகளுக்கு முன்னுரிமை
கடந்த காலங்களில் சில கைதிகளுக்கு முன்னுரிமை 'விஐபி' சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது. இனிமேல் அதுபோன்ற நடைமுறைகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது.
'ஒரு அரசாங்கமாக, சட்டத்தை செயல்படுத்தும்போது யாருடைய அந்தஸ்தையும் நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. சட்டத்தின் முன் சமத்துவம் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சமத்துவத்தை உறுதி செய்தால், அது நடைமுறையில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
முந்தைய அரசாங்கங்களின் நடைமுறைகளிலிருந்து மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நியாயம் மற்றும் பாரபட்சமற்ற கலாச்சாரத்தை வளர்த்துள்ளது.இது முந்தைய அரசாங்கங்களின் கீழ் காணப்படவில்லை.
ஆனால் இப்போது யாரும் மற்றவரை விட சாதகமாக இல்லாத ஒரு அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்கிறோம்.
க்ளீன் ஶ்ரீலங்கா
இருப்பினும், ஒரு சிலர் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்போது, சிலர் தாங்கள் பழகிய நடைமுறைகள் சவால் செய்யப்படுவதால் பதட்டமடைவது இயல்பானதாகும்.
சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதற்கான கொள்கை சிறைச்சாலைகளுக்கு அப்பாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சகல துறைகளிலும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
"க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டத்தின் கீழ் இது எங்கள் முதன்மை நோக்கமாகும். சட்டத்தின் நியாயமான நடைமுறைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு ஆணை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |