தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அங்கம் வகிக்காது - சஜித்
மக்கள் ஆணை இல்லாதவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18.04.2023) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்க ஹிட்லர் மாதிரி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு தேசிய அரசாங்கத்திற்காக, இரண்டாம் உலகப் போரின்போது ஜோசப் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஹிட்லர் செய்தது போலவே ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு
இந்தநிலையில், ஊடகவியலாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தரப்பினர் இந்த பொய்யைப் பரப்புகின்றனர்.
ஒட்டுமொத்தமாகவோ அல்லது எந்தவொரு தனிப்பட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்திலோ அல்லது தேசிய அரசாங்கத்திலோ இணைய மாட்டார்கள் உடனடி பொது அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இல்லாவிட்டால் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்களின் நாடித் துடிப்பை தீர்மானித்து, மக்கள் அதற்கான சமிக்ஞையை வழங்கினால், தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் இணைந்து கொள்வது குறித்து தமது கட்சி பரிசீலிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.



