மீண்டும் விழிக்குமா சந்திரயான் 3 : இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல்
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் - பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை நேற்று (22.09.2023) வெள்ளிக்கிழமை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் (X) சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 22, 2023
Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.
As of now, no signals have been received from them.
Efforts to establish contact will continue.
நிலவின் பகல்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
அதில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன.
ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது. இந்நிலையில் நிலவில் பகல் பொழுது முடிந்ததால் லேண்டரும் ரோவரும் அணைக்கப்பட்டிருந்தன.
உறக்க நிலை
தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கிய போது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத ஆரம்பத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலர் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயற்பாட்டு நிலைமைகள் மேம்படும்.
14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.
சிக்னல் பெற முடியவில்லை
இந்த நிலையில் நேற்று (22.09.2023) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது.
ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் கந்தகம்
ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
தொடர்ந்து, அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஒக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |