அதிகரித்த பொது மக்களின் வாழ்க்கை செலவு: ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) பொது மக்களின் வாழ்க்கை செலவினை குறைக்க முடியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று (19.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) 69 லட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒரே நாளில் தூக்கி எறியப்பட்டதோடு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வேண்டியும் இருந்தது.
சஜித்தின் எண்ணம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இந்தப் போராட்டத்தின் வலிகளை நன்கு உணர்ந்தவர். அதனால் இந்த ஊழல் மிக்க பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த இந்த அரசாங்கத்துடன் இணைய அவர் விரும்பவில்லை.
குறிப்பிட்ட காலத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்றின் மூலம் ஒரு புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம் ஆகும்.
இந்த ஊழல் மிக்க அரசாங்கத்துடன் சஜித் பிரேமதாசாவை இணைத்து கொண்டு செல்ல முடியாது என்று மொட்டு கட்சியினருக்கு நன்கு தெரியும்
அந்நிய செலாவணி
தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளக்கூடிய சிந்தனை உடைய தலைவர் என்று நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
இருப்பினும், பொதுமக்களின் வாழ்க்கை செலவினை குறைக்க முடியவில்லை. வெளிநாட்டிலிருந்து அந்நிய செலாவணி தற்போது நமது நாட்டிற்கு அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, நாட்டில் தற்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாட்டை காட்டுகின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |