எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என அறிவிப்பு
எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தி வருவதாலும் இது தொடர்பில் உறுதியளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, நீர்த்தேக்கங்களில் சுமார் 750 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58.7% ஆகும்.
மழைப்பொழிவு தொடர்பான கணிப்பு

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் சுமார் 1000 ஜிகாவாட்-மணிநேர நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நீர் இருப்பை அரசால் உருவாக்க முடியும்.
கணிப்புகளின்படி, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 1000 ஜிகாவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நீர் இருப்பை வைத்திருப்பது அவசியமாகும்.
தற்போது சுமார் 3000 மெகாவாட்டாக (MW) உள்ள உச்சகட்ட மின்சாரத் தேவை, அதிக வெப்பநிலை காரணமாக ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 3,350 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.