அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ஏதுமில்லை: ஈரான் தூதுவர் அதிரடி விளக்கம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடி அல்லது மறைமுகமான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் ரெசா அமிரி மொகதம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு ஊடகமான 'இர்னா' (IRNA) வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு ஈரான் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக, ஈரானுடன் தகுந்த நபர்கள் மூலம் தனது நிர்வாகம் பேசி வருவதாகவும், ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஈரான் துடிதுடிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
பேச்சுவார்த்தை
ஆனால், இதனை மறுத்துள்ள ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர், அமெரிக்கா தனக்குத் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதாகக் கிண்டல் செய்துள்ளார்.
இதற்கிடையில், இந்தப் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தூதுவர் அமிரி மொகதம், தெஹ்ரான் மற்றும் வொஷிங்டன் இடையே உரையாடலுக்கான களத்தை அமைக்க நட்பு நாடுகள் முயற்சிப்பதை வரவேற்பதாகவும், இந்த 'திணிக்கப்பட்ட போர்' முடிவுக்கு வர அந்த முயற்சிகள் பலன் தரும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பதற்றமான சூழலில் ஈரானின் இந்த விளக்கம் சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.