ஈரான் விவகாரம்: ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இணைந்து கையாளுவதாக இஸ்ரேல் தகவல்
ஈரான் நாட்டுடனான அணுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இணைந்து வழிநடத்தி வருவதாக இஸ்ரேலிய பொருளாதார அமைச்சர் நிர் பர்கத் (Nir Barkat) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஊடகங்களில் வெளியான போதிலும், இரு நாட்டுத் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் இந்தச் சூழலை கையாண்டு வருவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை
இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு சேவையான 'கான் நியூஸ்' (Kan News) தளத்தில் பேசிய அவர், ஈரானுடன் எத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், அது அந்த நாட்டின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை முழுமையாக முடக்கும் வகையில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைகளே ஓங்கியிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டே, மறுபுறம் வளைகுடா பிராந்தியத்தில் இராணுவப் படைகளை நிலைநிறுத்தி அழுத்தம் கொடுத்து வருகிறார்" என்றும் அமைச்சர் நிர் பர்கத் சுட்டிக்காட்டியுள்ளார்.