ஈரானியர்களுக்கு அதிரடி தடையை விதித்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதற்கான புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பானிஸ் (Albanese) தலைமையிலான அவுஸ்திரேலிய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, தற்காலிக விசாக்களைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் 6 மாதங்கள் வரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ஈரான் பெயரிடப்பட்டுள்ளது.
யாருக்கு தடை..
ஈரானில் தற்போது நிலவி வரும் போர் மற்றும் உள்நாட்டுப் பதற்றங்கள் காரணமாக, தற்காலிக விசாக்களில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் ஈரானியர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் அல்லது வெளியேற முடியாது என்ற அச்சம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு வெளியே இருந்து Visitor (Subclass 600) விசா வைத்திருக்கும் ஈரானிய கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவிற்குள் இருப்பவர்கள் அல்லது பயணத்தில் (In transit) இருப்பவர்களுக்கு இந்தத் தடை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியப் பிரஜைகள் அல்லது நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்களின் மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் (Tony Burke), "போர்ச் சூழலுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பல விசாக்கள் இப்போது விண்ணப்பித்திருந்தால் வழங்கப்பட்டிருக்காது.
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்குவது என்பது அரசாங்கத்தின் முடிவாக இருக்க வேண்டுமே தவிர, யாரோ ஒருவர் சுற்றுலா வந்ததன் விளைவாக தற்செயலாக நடக்கும் ஒன்றாக இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மாத்திரம் சிலருக்கு 'அனுமதிக்கப்பட்ட பயணச் சான்றிதழ்' (Permitted Travel Certificate) வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.