நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் பயனில்லை - சம்பிக்க
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் இது ஒரு பயனற்ற தீர்மானம் எனவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி காரணமாக, வரும் ஆண்டுகளில் சட்டம் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்துத் துறைகளும் பாரிய மாற்றங்களைச் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் பயனற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் தலைமைத்துவம் பழைய கருத்தியல்களைக் கொண்ட ‘நியன்டர்தால்’ மனநிலையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எலோன் மாஸ்க் போன்ற உலகளாவிய முன்னணி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவது போல், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் அனைத்துச் செயல்பாடுகளும் தரவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கும் என தெரிவித்துள்ளார்.
இத்தகையதொரு நவீன யுகத்தில், பழைய மூத்த தலைமுறையினரை முன்னோக்கி கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசியல்வாதிகள் 'ஹோமோ சேப்பியன்ஸ்' தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அல்லர் எனக் குறிப்பிட்ட அவர், பழைய ஸ்டாலினிச பாணியிலான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதே அவர்களின் ஒரே இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான முதல் படிநிலை ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நோக்கத்தை அடைவதற்காக, தமக்கு சவாலாக விளங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைச் சிறையில் அடைத்து எதிர்க்கட்சியை முற்றிலுமாக அடக்குவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.