தேர்தலில் தோல்வியுறுவர் என அறிந்தே தேர்தலை நடத்தாமல் உள்ளனர் : அலிசாஹிர் மௌலானா
நாட்டில் எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் தற்போது பதவியில் இருக்கும் அத்தனை நபர்களும் படுதோல்வி அடைவார்கள் என்று அறிந்ததாலேயே இன்னும் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இன்று (22.01.2023) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிராக வாக்களிப்பர்
மேலும் தெரிவிக்கையில்,
மனசாட்சி உள்ள அனைவருமே பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலேயே நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க எண்ணுகிறார்.
அதற்காக தான் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
மகஜர் கையளிப்பு
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த சிவில் சமுக செயற்பாட்டாளர் புகாரி கருத்து தெரிவிக்கையில், 'தாங்கள் சிறுபான்மை சமூகம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகள் சார்பாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினை முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜரையும் கையளித்துள்ளோம்.
மேலும் நாங்கள் இன்று நடாத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையம் மற்றும் மாநகர சபையிடம் ஆர்ப்பாட்டத்தினை நடாத்த அனுமதி கோரி அது கிடைத்திருந்த நிலையில், எமக்கு கொழும்பிலிருந்து அழைப்பு வந்ததாகவும் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லை என்றால் இதில் கலந்து கொள்ளும் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும்' அவர் தெரிவித்தார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், சிவில் சமுக ஏற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |