ஜெனிவாவில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என இந்தியா உறுதி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என இந்தியா உறுதியளித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், ஐக்கிய இராச்சியம் தலைமையிலான முக்கிய குழுக்கள் நகர்த்தும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமா என்பதை இந்தியா தெரிவிக்கவில்லை.
இந்த தீர்மானத்தின் மீது நடந்த முறைசாரா ஆலோசனைகளின்போது, இந்தியாவின் நிலைப்பாடு உறுதியற்றதாகவே இருந்தது. எனினும் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளியிட்டன.
அதேநேரம் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த இந்தியா இலங்கையை வலியுறுத்தியிருந்தது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக முந்தைய அரசாங்கத்தின் கீழ் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியதையடுத்து சமீபத்திய காலங்களில் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் தாக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.