சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து வெளியேறுவது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று இதனைத் தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில் இருந்து வெளியேறும் எனக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்பது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பணக் கொடுப்பனவுகள்
உலகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் அந்தக் காலத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது அமைச்சர் ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 7 ஆவது மற்றும் 8 ஆவது கடன் தவணைப் பணக் கொடுப்பனவுகள் நிச்சயமாகக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பல இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய இலக்குகளை அடையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.