உக்ரைன் போரில் இலங்கையர்களின் பங்களிப்பிற்கு ஆதாரம் இல்லை: ரஷ்யா பகிரங்கம்
உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என ரஷ்யா(Russia) தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம்(Russian Embassy in Colombo) கூறியுள்ளது.
அத்துடன் உக்ரைன் மோதலில் இலங்கை பிரஜைகளின் பங்கேற்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பிரஜைகளின் நலன்கள்
ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கைக்குள் ஆட்சேர்ப்பு நிறுவனம் பற்றி தமக்கு தெரியாது. போர் வலயத்திலிருந்து தப்பி வந்ததாக கூறப்படும் ஒரு கோப்ரல் இலங்கைக்குத் திரும்பியதற்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ரஷ்யாவின் பிரதேசத்தில் இலங்கை பிரஜைகளின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
அதேநேரம், இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகப் பிரிவினால் விசா வழங்கப்படும் போது, விண்ணப்பதாரர்களின் செல்லுபடியாகும் ஆவணங்களின் அடிப்படையில், இராணுவ நடவடிக்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத அவர்களின் பயண இலக்குகள் உறுதிப்படுத்தப்படுகின்றன.
அத்தகைய நோக்கங்களைக் கொண்டவர்கள் ரஷ்யாவிற்கு நுழைவதைத் தடுக்க, தூதரகம் அவர்களுடன் கூடுதல் நேர்காணல்களை நடத்துகிறது.
இருப்பினும், இலங்கையர்கள் தங்கள் பயண இலக்கையோ அல்லது ரஷ்யாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தன்மையையோ மாற்ற முடிவு செய்தால், அவர்களைத் தடுக்க முடியாது.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்கும் அதே வேளையில், ரஷ்யாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள், மொஸ்கோவில் தொடர்புடைய இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் திறனுக்குள் அடங்கும்” என்றும் ரஷ்ய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |