இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்(Sundaralingam Pradeep ) தெரிவித்துள்ளார்.
ஹட்டனில்(Hatton) இன்று(11) நடைபெற்ற, 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்டப்பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளை அமைப்பதற்குரிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது அமைச்சின் செயலாளர் கூறினார் எனவும், மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.
தவறான வதந்தி
தேசிய மக்கள் சக்திமீது சேறு பூசுவதற்காக இன்று பல குழுக்களும், தோல்வி அடைந்த கட்சிகளும் செயற்பட்டுவருகின்றன. சொல்லாததை சொன்னதாகவும், செய்யாததை செய்ததாகவும் கருத்துகளை பரப்பிவருகின்றனர்.
அவ்வாறான எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை. எனவே, வதந்திகளை பரப்பி மக்களை அச்சப்படுத்தாமல், உண்மையை எடுத்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி இன்னும் ஒரு வருடம்தான் செல்லும் என அரசியல் ரீதியில் வங்கரோத்தடைந்தவர்கள் கூறிவருகின்றனர்.
மக்கள் எந்த நோக்கத்துக்காக வாக்களித்தார்களோ எந்த நோக்கத்தை நிறைவேற்றும்வரை எமது ஆட்சியை கவிழ்க்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் மிக விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் "என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |