துண்டுச் சீட்டுக்கு எந்த நாடும் தடுப்பூசியை வழங்கியதில்லை - ஐ.மக்கள் சக்தி
உலகில் எந்த நாடும் துண்டுச் சீட்டுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கியதில்லை எனவும் அரசியல்வாதிகளின் பட்டியல்களுக்கு அமைய தடுப்பூசியை வழங்குமாறு பலவந்தப்படுத்துவது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சரியான நேரத்தில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யாத அரசாங்கம் மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளி விட்டு, கறுப்புச் சந்தையில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முயற்சித்து வருகிறது.
கோவிட் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் கூறிவந்தார்.
தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டதும் அதனை விநியோகிக்கும் கட்டமைப்பு என்ன என்று கேட்ட போது, இராணுவத்தினர் அதனை செய்வார்கள் எனக் கூறினர். எனினும் தடுப்பூசியை இறக்குமதி செய்வதில் இருந்து அதனை விநியோகிக்கும் வரை செயற்பாடுகளில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
உலகில் ஏனைய நாடுகள் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னரே எமது நாட்டில் இருந்து தடுப்பூசிகளை பெற விண்ணப்பிக்கப்படுகிறது.
அப்போது கொள்வனவு செய்ய தடுப்பூசிகள் இல்லை. எஸ்ராசேனேகா தடுப்பின் இரண்டாவது மாத்திரை பெற கடந்த வாரம் அமைச்சரவை நிதியை ஒதுக்கியுள்ளது. அதனை பெற்றுக்கொள்ள நிதியை ஒதுக்க இந்தளவு காலத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.
கறுப்புச் சந்தையிலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கறுப்புச் சந்தையில் மருந்தை கொள்வனவு செய்தால், பாரதூரமான நிலைமை ஏற்படக் கூடும். உலகில் ஏனைய நாடுகள் தடுப்பூசியை வழங்கி முடிந்த பின்னரே எமது நாடு தடுப்பூசியை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தளவுக்கு பின்தங்கி போயுள்ளனர். பின்தங்கிய நிலைமையிலேயே அரசாங்கம் மக்களின் உயிர்கள் பற்றி சிந்திக்கின்றது எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.