கோவிட் வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை - வஜிர அபேவர்தன
கோவிட் வைரஸ் தொற்று நோயில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக ஒரு சட்டமூலத்தையோ, ஷரத்தையோ அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காணொளி தொழிற்நுட்பம் மூலம் கோவிட் நிலைமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமையில் அரசாங்கம் தொடர்ந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டை காப்பற்ற அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அப்படியில்லை என்றால், முழு நாட்டு மக்களும் கடும் சிரமங்களுக்கு உள்ளாவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நோயை வலுவாக எதிர்கொள்வதற்காக உலகில் பல நாடுகள் சட்டங்களை மாற்றியுள்ளன.
எனினும் இலங்கை இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் தமது உயிர்கள் மூலம் இழப்பீடுகளை செலுத்த நேரிட்டுள்ளது.
தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தேவையான 200 மில்லியன் டொலர்களை முழுமைப்படுத்திக்கொள்ள தற்போதை அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.