வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் தகவல்
வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்களை அடையாளம் காணாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அந்த அமைப்புகளில் இணைவதற்கு சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்துவதால், அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது சற்று கடினமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைனுக்குள் சண்டையிடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறிய எந்தவொரு நாட்டவர் மீதும் அரசாங்கம் எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது என்றும், ஒரு நாடு என்றவகையில் உள்ளூர் முகவர்கள் மூலம் ஆட்சேர்ப்புகளைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |