நிபா வைரஸின் தீவிரம்: வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கும் எச்சரிக்கை
இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வருகைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலையங்கள் மற்றும் ஏனைய நுழைவுப் பகுதிகளில் குடிவரவுச் சோதனைகளின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தடுப்பு நடவடிக்கை
சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்கள் மற்றும் நுழைவுப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள், இரத்தம் தொடர்பான சுகாதார ஆலோசனைகள் மற்றும் தேவையான இடங்களில் தடுப்பூசி தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் ஒரு நோயாளி கண்டறியப்படும் வரை காத்திருக்கக் கூடாது. சர்வதேச பயணம் மற்றும் சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு முன்கூட்டியே செயல்படுவது மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நிபா வைரஸ், ஒரு விலங்குவழி வைரஸ் ஆகும். முக்கியமாக பழந்தின்னி வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் இது பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தசை வலி மற்றும் வாந்தி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
உயிரிழப்பு ஏற்படலாம்
தீவிரமான நிலையில், மூளை வீக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கும் வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட வெளவால்களின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது கழிவுகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படுதல், அவற்றினால் அசுத்தமடைந்த உணவு அல்லது நீரை உட்கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பன்றிகள் போன்ற விலங்குகளுடன் தொடர்பு வைத்திருத்தல் மூலம் பரவுகிறது.
மிகக் குறைந்த அளவில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இது பரவக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் மற்றும் அசுத்தமடைந்திருக்கக்கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |