கல்முனை - சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் இரவுவேளை திடீர் சோதனை
கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இரவுவேளை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திடீர் சோதனை
அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேற்படி பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிராந்திய தர முகாமைத்துவ மற்றும் சுற்றுச்சூழல் தொழில்சார் உணவு பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் உணவு மருந்துகள் பரிசோதகர் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
பல தடவைகள் அறிவிக்கப்பட்டிருந்தும் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
பாவிக்க முடியாத சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டது. பொதுமக்களின் நலன்கருதி பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பனிப்பாளரின் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











