யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நிறைவு பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தணவேந்தர் பதவிக்கான சுற்றறிக்கையின் படி, பேரவையின் செயலாளரான பதிவாளரால் பகிரங்க விளம்பரம் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாகவும், 63 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பதவிக்கு நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரி நியமனம் பெற்ற தினத்திலிருந்து மூன்று வருடங்களுக்கு அல்லது அவர் தனது 65 வயதைப் பூர்த்தி செய்யும் நாள் வரை - இந்த இரண்டில் எது முன்வருகின்றதோ அது நாள் வரை பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேரவைக் கூட்டம்
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பிறந்த திகதியை உறுதிப்படுத்தத்தக்க வகையில், ஒரு முழுமையான சுயதகைமை விபரப் பட்டியல், விண்ணப்பதாரி பல்கலைக்கழக அபிவிருத்திக்கான உயர் நோக்குக்கான கூற்றுடன் அவர் நியமிக்கப்படும் பட்சத்தில் தான் அடைய முன்மொழிவன பற்றியதொரு சுருக்கமான விளக்கம், விண்ணப்பதாரி தற்போது இப்பதவியை வகிப்பவர் அல்லது முன்னர் இப் பதவியை வகித்தவர் எனின் அவர், தன்னுடைய முன்னைய பதவிக்காலத்தில் சாதித்தவை பற்றியும், எதிர் காலத்திற்கான திட்டங்கள் பற்றியும் கோடிட்டுக் காட்டும் வகையிலான அறிக்கையொன்றையும் கையளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரி அரச பொதுத்துறை, கூட்டுத்தாபனங்கள், நியதிச்சபைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் யாதாவதொன்றில் சேவை புரிபவராயின் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவாராயின் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட முடியுமா என்பதனை அறியத்தரும் பொருட்டு தொழில் கொள்வோரிடமிருந்து ஒரு கடிதமும் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் ‘பேரவைச் செயலாளர், பதிவாளர் அலுவலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்’ என முகவரிக்கு ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவோ நேரடியாகக் கையளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இல. 03/2023 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, விண்ணப்பங்கள் முடிவு திகதியிலிருந்து இரு மாதங்களுக்குள் மதிப்பீட்டிற்காக சிறப்பு பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு விண்ணப்பதாரியும் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறுபவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, அடுத்த துணைவேந்தரை ஜனாதிபதி நியமிப்பார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




