கொழும்பில் இருந்து சொந்த பகுதிகளுக்கு செல்லும் 13 லட்சம் பேர்
புத்தாண்டுக்காக 13 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கிராமங்களுக்கு செல்லவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி அனைவருக்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இன்று விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
05 பிரதான பிரிவுகளின் கீழ் பேருந்துகளை இயக்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வழக்கமான பயணங்களை விட கூடுதலாக 700 பயணங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று அதிகமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து துணைப் பொது மேலாளர், தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க வேண்டிய மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, போக்குவரத்து பாதையில் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.