சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட புதுவருடக் கொண்டாட்டங்கள்
நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடுகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட அருட்தந்தையர்களினால் புதுவருட விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நாட்டின் இன்றைய மோசமான நிலைமைகள் நீங்கி நாடு செழிப்படையவேண்டியும் நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்பட வலியுறுத்தியும் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
இன்றைய தினம் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பெருமளவான பக்தர்கள் புதுவருட ஆராதனையில் கலந்துகொண்டனர். இதன்போது பக்தர்களுக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் ஆசி வழங்கப்பட்டது.
இதேவேளை, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
பொருளாதார பிரச்சினைகளுக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களில் நேற்று நள்ளிரவு ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதேநேரம் வானவேடிக்கைகளும் நகரை வண்ணமயமாக்கியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மூவின மக்களும் ஒன்றுகூடி இந்த புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்ததை காணமுடிந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் மட்டக்களப்பு நகருக்குள் வருகைதந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் வீதிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தை காணமுடிந்து.
ஈஸ்டர் தாக்குதல்,கொரனா அச்சுறுத்தல்,பொருளாதார நெருக்கடிகளினால் மிகவும் கஸ்ட நிலையிலிருந்து மக்கள் இன்று மகிழ்ச்சியுடன் புதுவருடத்தினை நம்பிக்கையுடன் வரவேற்றதை காணமுடிந்தது.
அத்துடன், பிறந்திருக்கும் புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் இன்று காலை ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
இன்று காலை ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் மூலமூர்திக்கும் வசந்தமண்டபத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்படவும் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமைகள் நீங்கள் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தங்களுக்குள் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.
கிளிநொச்சி
கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்திலும் புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை நடைபெற்றுள்ளது.
அருட்தந்தை A.V சில்வெஸ்ரதாஸ் தலைமையில் இடம்பெற்றது. நள்ளிரவு 11.30 மணிக்கு குறித்த ஆராதனை இடம்பெற்றது. பெருமளவானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம்
ஆங்கில புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலிள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேவலாயங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவலாயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியுடான ஆராதனை இன்று நள்ளிரவு இடம்பெற்றது.
இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்குரிய ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார். இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் பலரும்கலந்து கொண்டனர்.
மன்னார்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8.மணிக்கு புது வருட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
இதன் போது கருத்து தெரிவித்த திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள், 2023 ஆம் ஆண்டு இனிதே பிறந்திருக்கின்றது.
சென்ற 2022 ஆம் ஆண்டிலேயே நமக்கு ஏற்பட்ட அனைத்து விதமான துன்பங்களும் இல்லாதொழிந்து பிறந்திருக்கிற இந்த ஆண்டிலே நன்மைகள் அனைத்தும் பன் மடங்கு பெருகி நோயற்ற வாழ்வு வாழ அருள் கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வவுனியா
ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குருக்கள் மயூரசர்மா குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த பலரும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டி
இறைவனை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்
கொண்டனர்.
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் வவுனியா, குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் ஆலய குரு யேசுவா கிறிஸ்வஸ் தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டு புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் காலையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையகம்
உலகெங்கிலும் 01.01.2023 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
காலை வேளையிலேயே சில பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும், இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
















விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
