இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நற்சான்றிதழ்களை கையளித்தார்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தனது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஆரம்பித்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
"இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், செழிப்பை அதிகரிக்கவும், அனைவருக்கும் ஆரோக்கியமான, இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் இந்த நாட்டு அரசு மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்று தூதுவர் சுங் கூறினார்.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மாற்றம் ஒருங்கிணைப்பாளருக்கான தலைமைப் பணியாளராகவும் இருந்தார். கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார். செயலாளரின் சிறப்புமிக்க கௌரவ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
அக்டோபரில் நடந்த காங்கிரஸின் செனட் சபை அமர்வின் போது, இலங்கை இந்தியப் பெருங்கடலின் மையத்தில் ஒரு மூலோபாய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய கடல்வழிப் பாதைகள் மற்றும் வர்த்தகப் பாதைகளை அணுகக்கூடிய அதன் முக்கியமான துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
"இது சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் இலங்கை மக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலுப்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.