வவுனியா மாநகர சபையால் அதிக வரி அறவீடு: மக்களின் தலையில் பாரிய சுமையை ஏற்படுத்தும் என்கிறார் திலகநாதன் எம்.பி
வவுனியா மாநகர சபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரி பாரிய பிரச்சினையாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26.03) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
7 மடங்கு அதிகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வவுனியா மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வாழுகின்ற மக்களினுடைய சோலை வரியானது கடந்த காலத்தில் அறவிடப்பட்ட தொகையை விட அண்ணளவாக 7 மடங்கு அதிகமாக மாநகரசபை உத்தியோகத்தர்களினால் சிட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் நகரசபை செயலாளரிடம் கேட்ட போது, கடந்த 15 வருடமாக வவுனியா நகசபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து மதிப்பீடு இடம்பெறவில்லை எனவும், கடந்த வருட இறுதிப் பகுதியில் சொத்து மதிப்பீடு இடம்பெற்றதாகவும் அதனடிப்படையில் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
சொத்து மதிப்பின் 15 வீதத்தை வரியாக அறிவிடுவதாக தெரிவித்தார். ஆனால், யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வீதம் குறைவாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 5 வீதமாக காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கும் போது வவுனியா மாநகர சபையில் 15 வீதமான வரி அறவீடு என்பது மக்களின் தலையில் பாரிய சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது.
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தூர இடங்களில் இருந்து வேலைவாய்ப்புகளுக்கு வந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச வேலைவாய்புக்காக வந்தவர்கள் இங்கு வாடகைக்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்த வரி விதிப்பு காரணமாக வாடகையை உரிமையாளர்கள் உயர்த்தும் போது அதனை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
வரிச் சுமை
அதைவிட, மக்களின நிதிச் சுற்று குறைவடையும். இதனால் பொருட் கொள்வனவு குறைவடைந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி குறைவடையும். மக்களின் வாழ்க்கை தரமும் குறைவடையும். ஆகவே, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களது தலையில் வரிச் சுமையை ஏற்ற மாட்டாது.
இவ்வாறு வரி அறவீடு செய்வதன் மூலம் தொழிற்சாலை மற்றும் தொழில் முனைவோர் தமது தொழிற்சாலைகளை கைவிடும் நிலை ஏற்படும். இதனால் வேலைவாய்ப்பு, தொழிற் முயற்சியாண்மை பாதிக்கப்படும். இது தொடர்பில் வட மாகாண ஆளுநருடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது, வருகின்ற மாநகர சபைத் தேர்தலின் பின் வருகின்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய வரி வீதம் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
எனவே, மே மாதம் 6ஆம் திகதி வருகின்ற மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் நிலைப்பாட்டில் தான் வரி வீதம் அமையும். அதுவரை மக்கள் புதிய வரியை கட்டத் தேவையில்லை. புதிய உறுப்பினர்கள் வருகை தந்த பின் சபையால் அது தீர்மானிக்கப்படும். எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிக வரி விதிக்கப்படமாட்டது.
ஏனைய மாவட்டங்களைப் போல் தான் வரி விதிப்பு இருக்கும். எமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வவுனியா நகசபையில் நிலையான வைப்பில் 18 கோடி உள்ளது. அந்த நிதியை பாவித்து திருநாவற்குளம், தாண்டிக்குளம் உள்ளிட்ட ஏனைய 10 வாட்டாரங்களின் வீதிகளும் புனரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பு செய்வோம். எமது அரசாங்கம் ஒரு போதும் மக்களுடைய தலையில் வரியை ஏற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |