இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை! வெளிவந்துள்ள தகவல்
இலங்கையில் பொலிஸாருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சீருடை தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி சாம்பல் நிற மேற்சட்டை மற்றும் நீல நிற முழுநீள காற்சட்டையைக் கொண்ட கனேடிய பொலிஸாரின் சீருடையை ஒத்த சீருடையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
புதிய சீருடை
இலங்கை பொலிஸாருக்கான புதிய சீருடையானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் புதிய சீருடைக்கான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான சூழலிலேயே கனேடிய பொலிஸாரின் சீருடையை ஒத்த சீருடையும் பரிசீலிக்கப்பட்டு வரும் தெரிவுகளில் இதுவும் ஒன்றென பொலிஸ் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நவீன தொழிநுட்ப உபகரணங்களுடன் கூடிய நவீன பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கையின் காலநிலைச் சூழலுக்குப் பொருத்தமான வகையில் இந்தப் புதிய சீருடை வடிவமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.