சிக்கியுள்ள முக்கிய பிரமுகர்கள்: இலங்கையில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில் அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கவர்ச்சிகரமான இளம் பெண்களின் போலி பேஸ்புக் கணக்குகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் மூலம் பழகி, பின்னர் வட்ஸ்அப் செயலிக்கு தொடர்பை மாற்றி வட்ஸ்அப் காணொளி அழைப்பினை மேற்கொள்கின்றனர்.
பணம் பறிக்கும் நடவடிக்கை
நிர்வாணமான தோற்றத்தில் அழைப்பை ஏற்படுத்தி, பின் அதனைப் படம்பிடித்து அல்லது போலியான ஆபாச காணொளிகளை உருவாக்கி, அதனை பாதிக்கப்பட்டவரின் சமூக வலைத்தள தொடர்புகளுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்த மோசடி கும்பல், இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டி பணம் கோருகிறது.
இதனை தொடர்ந்தே சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமூகத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கூட இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும், சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.