ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
ஜெர்மனியில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜெர்மனிக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவிட் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கே இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றது. தற்போது சாலை, ரயில் மற்றும் கடல் மூலம் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெர்மனியில் கடந்த 2 மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினம் புதிதாக 2,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே, சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.