சுங்கத்துறைக்கு புதிய ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பம்
சுங்கத்துறையின் பணிளை மேலும் திறம்படச் செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகி உள்ள, உதவி சுங்க கண்காணிப்பாளர் மற்றும் சுங்க ஆய்வாளர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட செல்வாக்கு செலுத்தி எவராலும் சுங்கத்தறைக்குள் நுழைய முடியாததோடு அது ஒருபோதும் நடக்காது எனவும் கூறியுள்ளார்.
ருவான்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேர்முகத்தேர்வு
இதன்படி, பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து, மேற்படி பதவிகளுக்கான நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களின் பட்டியல், மதிப்பெண் வரிசைப்படி அல்லாமல், அகர வரிசைப்படி முதலில் சுங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
''எதிர்வரும் நேர்காணல்களில் நேர்காணல் குழு முன்னிலையில் உயரம் மற்றும் மார்பை அளவிடுவதற்கான பணிகள் நடைபெறவுள்ளது.
பின்னர் சான்றிதழ்கள் பரிசோதித்து, சுற்று நிருபத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படி விளையாட்டு திறன்களுக்காகவும் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்த நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் மீண்டும் தேர்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின் அப்பெறப்பட்ட புள்ளிகள் மற்றும் பரிட்சையின் பெறப்பட்ட புள்ளிகள் ஒன்றாக சேர்த்து அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலை ஆட்சேர்ப்புக்காக சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.
இதன்படி, நாட்டின் கல்வியறிவு பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு இந்த நாட்டிலேயே அதிக வருமானம் தேடும் நிறுவனத்தில் இணைவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் முன்மாதிரியான ஆட்சேர்ப்பு நடைபெறுவதால், குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திற்கு வெளியில் எதுவும் நடக்காது." என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |