கொழும்பில் அலுவலகம் நடத்திய இந்தியர்கள் கைது
இலங்கைக்கு (Sri Lanka) சுற்றுலா விசாவில் வந்து, கொழும்பில் (Colombo) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சட்டவிரோதமாக நடத்தி வந்த இந்திய நாட்டவர்கள் சிலர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கறுவாத்தோட்டத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட அதிகாரிகள் அங்கிருந்த இந்தியர்களான ஏழு ஆண்களையும் ஒரு பெண்ணையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, அனைத்து இந்தியர்களும் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் 14 நாட்கள் விசா காலத்தை தாண்டியும் நாட்டில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகள்
அத்துடன், இந்தக் குழுவினர் கறுவாத்தோட்டத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தமது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை முன்னெடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், உள்ளூர் குடியேற்ற சட்டத்தின்படி, சுற்றுலா விசாவின் கீழ் வெளிநாட்டவர்கள் எந்த வகையான வேலையிலும் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |