போராட்டங்களின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகள்
மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பரிந்துரைகளை வழங்குவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரின் மேற்பார்வையில், மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு இணங்க, போராட்டங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலான முறையான பொறிமுறை அவசியம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
றம்புக்கண போராட்டத்தின் போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் அண்மையில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, றம்புக்கண துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை நாளை(25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.



