சிறைகளுக்குள் உருவாகும் மோதல்கள்! பணியில் ஆயிரம் உளவுத்துறை அதிகாரிகள்
சிறைச்சாலைகளில் பல்வேறு மோதல் சூழ்நிலைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், கைதிகளின் நடத்தையை உன்னிப்பாக கண்காணித்து அறிக்கை அளிப்பதற்காகவும் சுமார் ஆயிரம் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழு புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.
கைதிகளின் வன்முறைச் செயல்கள், அவர்கள் ஏற்பாடு செய்யும் சதித்திட்டங்கள் மற்றும் வெளியிலுள்ள பாதாள உலகக் கும்பல்களுடனான அவர்களின் உறவுகள் குறித்து விசாரித்துத் தகவல் வழங்குவதே இந்த உளவுத்துறைக் குழுக்களின் முக்கியப் பணியாகும்.
சிறைகளுக்குள் உருவாகும் கும்பல்கள்
மேலும், சிறைகளுக்குள் கும்பல்கள் உருவாவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, கைதிகளை நீண்ட காலம் ஒரே இடத்தில் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலாக, அவர்களை அவ்வப்போது மற்ற சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.

நீதி அமைச்சசு மற்றும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 42,000 கைதிகள் உள்ளனர்.
இவர்களில், கடுமையான குற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 817-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடங்குவர்.
சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டம்
சிறைச்சாலைகளுக்குள் இருந்தபடியே பல்வேறு முறைகேடுகளையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றும் பாதாள உலகக்கும்பல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு உளவுத்துறை அமைப்புகளுக்கு அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான அனுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார்.