கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் தோன்றியுள்ள புதிய இடம்
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களுங்கிடையில் உள்ள பகுதிகள் எந்த மாவட்ட எல்லைக்குள் வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கில் பல இடங்களிலும் கிராமங்களில் எல்லைகள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள போதும் நியாயப்பூர்வமான பதில்கள் எவற்றையும் பெற முடியாதது கவலைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.
வீதிகளில் உள்ள இடங்களைக் குறிக்கும் பெயர்ப் பலகைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் ஆளுகை எல்லைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள காட்சிப்படுத்தல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இரு கிராமங்களின் எல்லைகளில் நடக்கும் விபத்து ஒன்று எந்த கிராமத்தின் எல்லைக்குள் நடைபெற்றதாக கருதப்படும் என்ற கேள்வியும் அந்த கிராமத்தின் எல்லை தொடர்பில் நிறுவப்பட்டுள்ள பெயர்ப் பலகை தொடர்பிலும் கேள்விகளை அவர்களில் பலரும் எழுப்புகின்றனர்.
அத்தகைய கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டியவர்கள் பொறுப்பற்ற தங்கள் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தும் அவற்றை இன்று வரை சீர் செய்ய முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.
A35 வீதியின் 15/3 பாலம்
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லையும் கிளிநொச்சியின் கண்டாவளை பிரதேச நிர்வாக எல்லையும் தங்கள் எல்லைக்கோடுகளை தர்மபுரம் விசுவமடு என்ற இரு கிராமங்களின் எல்லைகளாக கொண்டுள்ளன.
பரந்தன் புதுக்குடியிருப்பு (A35 வீதியில்) பிரதான வீதியில் நெத்தலியாற்றுப் பாலத்திற்கு முன்னும் பின்னுமாக அமைந்துள்ள பெயர்ப் பலகைகள் மூலம் இந்த விடயம் பயணிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரந்தனில் இருந்து 15 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் 15வது கிலோமீற்றர் வீச்சினுள் அமையும் மூன்றாவது பாலமாக இது இருக்கின்றது.15/3 என அப்பாலம் பெயரிடப்பட்ட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பில் இருந்து A35 வீதியின் வழியே பரந்தனுக்குச் செல்லும் போது நெத்தலியாற்றுப் பாலத்தின்(15/3) ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரவேற்கின்றது என்ற பெயர்ப்பலகை நிறுவப்பட்டு தர்மபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வரும் விசுவமடு கிராமத்திற்குள் வருவோரை வரவேற்கும் வகையில் அது இருக்கின்றது.
அவ்வாறே விசுவமடுவில் இருந்து தர்மபுரம் கிராமத்திற்குள் உள் நுழைவோருக்கு தர்மபுரம் என்ற கிராமத்தின் பெயர்ப்பலகையானது நெத்தலி ஆற்றுப் பாலத்தினைக் கடந்து செல்லும் போது வீதிக்கு தெற்கில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பாதையின் வீதியம்மன் சிலைக்கருகில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் வீதிக்கு வடக்கில் ஒரு ஆலயமும் தெற்கில் மற்றொரு ஆலயமும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்மபுரம் என்ற பெயர்ப்பலகைக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் வரவேற்பு பலகை உள்ள இடத்திற்கும் இடையில் சராசரியாக 50 மீற்றர் தூரம் இருக்கும்.
இப்போது இந்த 50 மீற்றர் பகுதியில் இருக்கும் ஆலயங்கள் எந்த கிராமத்திற்கு உரியவையாகிருக்கின்றன என்ற கேள்வி எழுகின்றது.நிர்வாக திட்டமிடலாளர்கள் இது தொடர்பில் எதனைத் தீர்மானித்துள்ளனர் என்ற கேள்வியும் எழுகின்றது.
விசுவமடுவிற்குரியதாக இருக்குமா? அல்லது தர்மபுரத்திற்குரியதாக இருக்குமா? இதற்கான பதிலைப் பொறுப்புணர்ச்சியோடு தரவல்ல யாரையும் சந்திக்க முடியவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
துறைசார் அதிகாரிகள் பலரும் அவர்களுடனான தொடர்பாடலின் போது பொருத்தமான விளக்கங்களைத் கூடத் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
A9 வீதியில் இரணைமடுச் சந்தி
A9 வீதியில் இரணைமடுச் சந்தியினைக் கடந்து மாங்குளம் நோக்கிப் பயணிக்கும் போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரவேற்கின்றது என்ற பெயர்ப்பலகையினை காண முடியும்.
அந்த பெயர்ப்பலகையினை கடக்கும் போது நாம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லையிலுள்ள செல்வதாகவே அமையும் என அந்த பெயர்ப்பலகை அறிவிப்பு உணர்த்தி விடுகிறது.
வீதிகளில் உள்ள பெயர்ப்பலகைகள் தொடர்பில் சமூக விடய ஆய்வாளர் வரதனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
பெயர்ப்பலகை ஒன்றின் மூலம் இடமொன்றின் பெயர் மற்றும் நிலையங்களின் பெயர்களை பார்ப்போருக்கு சுட்ட முடிகின்றது.
அது போலவே வீதிகளில் நிறுவப்பட்டுள்ள வீதிக் குறியீடுகள், கிராமங்களின் பெயர்கள், நிர்வாக எல்லைகள் என்பன தொடர்பிலும் நாம் பார்ப்போராக பயன்படுத்துநராக இருக்கின்றோம்.
வீதிகளில் உள்ள கிராமங்களில் பெயர்களை குறிக்கும் போது ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ள பெயர்ப்பலகை தொடர்பில் அது உணர்த்தப்படும் விடயம் சார்பானதாக சிந்திக்கின்றோம்.
விசுவமடுவில் இருந்து தர்மபுரம் செல்லும் ஒருவர் தர்மபுரம் பெயர்ப்பலகையினை கண்ணுற்றதும் அதனை கடந்ததும் தான் விசுவமடுவில் இருந்து தர்மபுரத்திற்குள் வந்து விட்டதாகவே கருதுகின்றார்.
அப்படியாயின் அவர் அந்த பெயர்ப்பலகையினை கடக்கும் வரை விசுவமடு கிராம எல்லையினுள் இருப்பதாகவே உணர்த்தப்படுகின்றது என அவர் மேலும் விளக்கியிருந்தார்.
சமூக விடய ஆய்வாளரின் கருத்தொத்ததாகவே வீதியபிவிருத்தித் திணைக்களங்களில் பணியாற்றும் துறைசார் பொறியியலாளர்கள் பலருடன் இந்த விடயம் சார்பாக சுட்டிக்காட்டி மேற்கொண்டிருந்த உரையாடலின் சாரமும் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முரண்பட்ட நிலை
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் நிறுவப்பட்டதாக உணரப்படும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரவேற்கின்றது என்ற வரவேற்பு பலகைக்கு பின்னுள்ள பகுதியே புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் வருகின்றது. வீதியின் வழியே அதைக் கடக்கும் வரை கண்டாவளை பிரதேச செயலகத்தின் எல்வைக்குள்ளேயே நாம் இருக்கப் போகின்றோம்.
ஆயினும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் வரவேற்பு பலகையில் இருந்து 50 மீற்றர் முன்னதாகவே தர்மபுரம் என்ற கிராமத்தின் எல்லை ஆர்ம்பமாவதாக தர்மபுரம் பெயர்ப்பலகை சொல்கின்றது.அதாவது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லை முடிவடைந்து 50 மீற்றர் தூரத்தின் பின்னரே தர்மபுரம் எல்லை ஆர்ம்பமாவதாக கருதமுடியும்.
கண்டாவளை பிரதேச செயலகத்தின் எல்லைக்குள் வரும் தர்மபுரத்தின் எல்லை விசுவமடு எல்லை முடிந்து 50 மீற்றர் அளவு தூரம் கடந்த பின்னே ஆரம்பமாகின்றது.
தர்மபுரத்தின் பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தோடு கண்டாவளை பிரதேச நிர்வாக எல்லை முடிவடையும் என்றால் இடையில் உள்ள நெத்திலியாற்றுப் பாலமும் இரண்டு இந்துக் கோவில்களும் எந்த கிராமத்தினுள் வரும் என்ற கேள்விக்கு பதில் என்ன குழப்பமானதாகவே இருப்பதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தர்மபுரம் பெயர்ப்பலகையினை கடந்து 50 மீற்றர் தூரம் சென்ற பின்னரே கண்டாவளை பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக வரவேற்புப்பலகையோடு முடிவடையும்.ஆகையால் இந்த இடங்கள் தர்மபுரம் எல்லையிலுள்ள வரப்போவதில்லை.ஆனாலும் கண்டாவளை பிரதேச எல்லையிலுள்ள வரும்.
அப்படியே மறுபக்கம் இருந்து சிந்தித்தால் விசுவமடு எல்லைக்குள் அவ்விடங்கள் வரும் என்பதாக அமையும்.ஆனாலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வராது என்றே எண்ணத் தோன்றும்.
பேச்சுக்கு இந்த போக்கு சாதாரணமானதாக இருக்கலாம்.ஆனாலும் நில அளவை மற்றும் ஆவணங்களில் ஒன்றன் மீது ஒன்று பொருந்துவதாக இரு எல்லைகள் இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
எல்லைகள் தொடர்பில் தெளிவு
இந்த குழப்பமான நிலை வடக்கில் மற்றும் கிழக்கில் பல இடங்களிலும் அவதானிக்க முடிவதென்பது எல்லைகள் தொடர்பில் அக்கறையற்று ஈழத்தமிழினம் இருக்கின்றதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.
சுதந்திர தேசம் ஒன்றுக்காக போராடும் ஒரு இனம் தன் நிலத்தின் எல்லைகள் தொடர்பில் தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கிராமங்களின் எல்லைகளிலேயே தெளிவான பார்வை இல்லாதவர்கள் தனிநாடு பெற்ற பின்னர் அதன் எல்லைகளை எப்படி சரிவர தீர்மானித்துக் கொள்ள முடியும்? என சமூக விடய ஆய்வாளர் கேள்வி எழுப்பிருப்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இந்தியா என்ற தேசத்தின் எல்லைகள் அதன் அயல் நாட்டோடு பகிரப்பட்டிருக்கும் போது சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் எல்லைகள் தொடர்பில் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதை அறிய முடியும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இலங்கையின் வடக்கு கிழக்கு தனி நாடாகவோ அல்லது சமஸ்டி சுயாட்சிப் பிரதேசமாகவோ மாற்றம் பெறும் ஒரு நாளில் இதன் எல்லைகளை தமிழர்கள் சிங்கள மக்களோடு தான் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.
எல்லை நிர்ணயத்தித்தில் தமிழர்களின் தெளிவற்ற பார்வை சுயாட்சிக்காக அல்லது சுயநிர்ணய உரிமைக்காக போராடி தீர்வொன்றைப் பெற்ற பின்னரும் இரு சாரராருக்கும் இடையில் எல்லைத்தகராறு தொடர்ந்தவாறே இருந்துவிடப் போகின்றது என்பது திண்ணம்.
தமிழர்களின் அமைதியான வாழ்வுக்காகவே அவர்கள் போராடி வருகின்றனர் என்றால் அதற்கான தீர்வின் பின்னர் அவர்கள் அமைதியாக இருப்பதற்குத் தேவையான உள்ளார்ந்த அறிவாற்றலையும் தமிழர்கள் தங்களிடையே வளர்த்துக்கொண்டு அதனை இப்போதே நடைமுறைப்படுத்தி தேர்ச்சி பெற வேண்டும் என்பது தீர்க்க தரிசனம் பார்வை என்பதில் ஐயமில்லை.
எப்படிச் சரி செய்யலாம்
மேலே சுட்டி வந்த கிராமங்களின் எல்லைகள் தொடர்பில் இப்போது உள்ள நிலைமை தவறானதே என்று துறைசார் பொறியியலாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலைமைக்கு பிரதேசங்களில் மற்றும் மாவட்ட மாகாணங்களில் உள்ள வீதிகள் மற்றும் மாகாண மாவட்ட எல்லைகள் தொடர்பான தரவுகள் ஒருமித்த பார்வையில் சரி பார்க்கப்படாது இருக்கின்றமையே காரணமாகும்.
இதனாலேயே எல்லைகளில் ஒரே தன்மையினைப் பேனமுடியாது போகின்றது. எல்லாத் தரவுகளும் ஒரே பார்வைக்கு கொண்டு வந்து ஒருங்கிணைத்தால் இத்தகைய முரண்பட்ட நிலை தோன்றியிருக்காது அவர் மேலும் குறிப்பிட்டார்.
தர்மபுரம் என்ற பெயர்ப் பலகையின் ஒரு பக்கம் தர்மபுரமும் அடுத்த பக்கம் விசுவமடுவும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமான மக்களாலேயே புரிந்து கொள்ளப்படும் போது அவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும்படி செயற்பட்டிருப்பது பொருத்தமற்ற செயற்பாடாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |