தமிழ் பொது வேட்பாளர் முன்னெடுப்புக்கு கிடைத்துள்ள புதிய ஆதரவு
தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் (Jaffna Chamber of Commerce) தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று (27.05.2024) மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு யாழ். வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில், சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ். வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட முக்கிய உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொது வேட்பாளரின் அவசியம்
இதன்போது, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொது வேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
இது பொது வேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான ஆதரவு
மேலும், இந்த சந்திப்பில் பொது வேட்பாளர் முன்னெடுப்பில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவில் யாழ். வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தின் முக்கியத்துவம் கருதி வேறு பல சமூக நலன் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் செயற்படும் அமைப்புக்களும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |