மொட்டுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளர் நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று (23) நடைபெற்றுள்ளது.
பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகள்
இதன்போது புதிய அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு - கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் பொதுமக்கள் இதனால் சந்திக்கும் இன்னல்களையும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில், உறுதியான மற்றும் நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே எனது முதன்மை இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை நினைவுகூர்ந்த ஆதரவாளர்கள், புதிய அமைப்பாளரின் நியமனத்தை வரவேற்பதாக இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் கண்டு, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய அமைப்பாளருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.