கிழக்கு ஆப்பிரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
நைஜீரியாவின் பெரும் தொழிலதிபரான அலிகோ டாங்கோட், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது ஆப்பிரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' பாதையை ஈரான் மூடியுள்ளதால், ஆப்பிரிக்க நாடுகள் எரிபொருளுக்காக மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதலீடு
இந்த நெருக்கடியான சூழலில், ஆப்பிரிக்காவிலேயே சொந்தமாக எரிபொருளைச் சுத்திகரிப்பது அவசியமாகியுள்ளது. ஏற்கனவே நைஜீரியாவின் லாகோஸில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வரும் டாங்கோட், தனது அடுத்த இலக்காகக் கென்யாவின் மொம்பாசா நகரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

"மொம்பாசா ஆழமான துறைமுகத்தைக் கொண்டுள்ளது மற்றும் கென்யாவின் பொருளாதாரம் பெரியது என்பதால் அங்கு முதலீடு செய்ய விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 15 பில்லியன் முதல் 17 பில்லியன் டொலர் வரை முதலீடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளில் சுமார் 44 சதவீதத்தை மட்டுமே தாமாகச் சுத்திகரிக்கின்றன.மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியையே நம்பியுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போது செயல்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவுமில்லை. டாங்கோட்டின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் எரிபொருளுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலை மாறும்.
உள்ளூரிலேயே சுத்திகரிப்பு நிலையங்கள் அமைவதால், பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைவதுடன், போக்குவரத்துச் செலவுகளும் குறையும்.

மேலும், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்க வழிவகை செய்யும்.
ஆப்பிரிக்கா தனது சொந்த வளங்களைக் கொண்டு தொழில் மயமாதலை நோக்கிச் செல்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக டாங்கோட்டின் இந்த "மெகா திட்டம்" பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சுதந்திரத்திற்கு இது ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.