ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும்
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலான புதிய சட்டமூலமொன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதன்மூலம் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்துக்கள் சரிபார்க்கப்படும் செயற்பாடு இலகுபடுத்தப்படும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெற இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
ஊழல் ஒழிப்பு தொடர்பான புதிய சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.03.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியமும் அந்தச் சட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இதுபோன்ற ஊழல் தடுப்பு மசோதாவைக் கொண்டுவர முயற்சித்தும் அது தோல்வியடைந்தது.
எனவே, ஊழலுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் யார் என்பது புதிய ஊழல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் அது தெரியவரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்குப் பதிலாக இந்தப் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த நீதி அமைச்சர், உரிய சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பரந்த அதிகாரங்களைக் கொண்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டம்
நாட்டில் மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்து கடந்த காலம் முழுவதும் தீவிரமான முறையில் விவாதிக்கப்பட்டாலும் அதை கையாள்வதற்கு தேவையான சட்டங்கள் போதுமானதாக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறும் நடவடிக்கையில் இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை வலுவாக உள்ளது.
எனவே, புதிய ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் போது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் எழுப்பும் சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றதாகவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
