புதிய களனி பாலத்தின் வீதிகள் இன்று முதல் மூடல்! மாற்று வீதிகள் தொடர்பில் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
புதிய களனி பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் இன்று(23) முதல் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
புதிய களனி பாலத்தை, துறைமுக அணுகல் மேம்பால நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இவ்வாறு பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இங்குருகொட சந்தியில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் அல்லது மூடல்கள் இடம்பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இதன்படி, இன்று (23) இரவு 9.00 மணி முதல் நவம்பர் 25 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை, நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் இரண்டுமே மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 25 முதல் 27 வரை, இரவு 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை, வெளியேறும் வீதி மட்டும் மூடப்பட்டிருக்கும்.

மீண்டும் நவம்பர் 28 இரவு 9.00 மணி முதல் டிசம்பர் 1 அதிகாலை 5.00 மணி வரை, நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகள் இரண்டுமே மூடப்பட்டிருக்கும்.
இதனால், கட்டுநாயக்க மற்றும் ஒருகொடவத்தையிலிருந்து கொழும்பு துறைமுகம் மற்றும் இங்குருகொட சந்தியை நோக்கிச் செல்லும் வாகனங்களும், அதேபோல் துறைமுகம் மற்றும் இங்குருகொட சந்தியில் இருந்து கட்டுநாயக்க மற்றும் பொரளை நோக்கிச் செல்லும் வாகனங்களும் பாதிக்கப்படும்.
கட்டுநாயக்க அல்லது கண்டியிலிருந்து கொழும்பு துறைமுகம் மற்றும் இங்குருகொட சந்தியை நோக்கிச் செல்லும் வாகன சாரதிகள், பேலியகொட அல்லது ஒருகொடவத்தை வெளியேறும் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒருகொடவத்தையிலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள், புதிய களனி பாலத்தின் தரைமட்ட வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், கொழும்பு துறைமுகம் அல்லது இங்குருகொட சந்தியில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் செல்லும் வாகன சாரதிகள், புதிய களனி பாலத்தின் தரைமட்ட வீதியைப் பயன்படுத்தி, பேலியகொட நுழைவு வாயில் வழியாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொழும்பு துறைமுகம் அல்லது இங்குருகொட சந்தியில் இருந்து பொரளை நோக்கிச் செல்லும் வாகனங்களும் புதிய களனி பாலத்தின் தரைமட்ட வீதியையே பயன்படுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.