கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : வெளியாகும் பல புதிய தகவல்கள்
புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் தற்போது பொரளையில் உள்ள தனியார் மயானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கெசல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த 19ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
கொலையைச் செய்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் செல்லும் போது புத்தளம் பாலவியாவில் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
அவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய வானின் சாரதியும் அங்கு கைது செய்யப்பட்டதோடு, குறித்த வானும் போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு வந்த பெண்ணும் தானும் கடந்த 17ஆம் திகதி கடுவலையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்திருந்ததாக துப்பாக்கி சூடு நடத்திய நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் உடை உட்பட பல பொருட்கள்
அவர்கள் அங்கு தங்கியிருந்தபோது, காரில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டவருக்கும், அந்த பெண்ணுக்கும் பார்சலை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
அந்த பார்சலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அணிந்திருந்த வழக்கறிஞர் உடை உட்பட பல பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மற்றைய பெண்ணும் கொலை நடந்த அன்று காலை பார்சலை கொடுத்த நபரால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற காரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கொலைக்கு முன்னரும் பின்னரும் குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
