ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கோவிட் தனிமைப்படுத்தல் விதிகள்
கோவிட் தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் கோவிட் தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் விரைவில் ஜேர்மனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
முதலாவதாக, தனிமைப்படுத்தலுக்கும், சுய தனிமைப்படுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. தனிமைப்படுத்தல் என்பது, கோவிட் தொற்று இருந்த ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இருந்ததால், ஒருவேளை உங்களுக்கும் கோவிட் தொற்று உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், உங்களிடமிருந்து மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இது வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
தற்போது, கோவிட் அதி அபாயம் உள்ள நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனிக்கு வரும் தடுப்பூசி பெறாத பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என்ற விதி உள்ளது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு கோவிட் பரிசோதனை செய்து, அவர்களுக்கு கோவிட் இல்லை என்று தெரியவரும் பட்சத்தில், இந்த தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்துவிடும்.
மரபணு மாற்ற கோவிட் வைரஸ் அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். அவர்களது தனிமைப்படுத்தல் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படாது.
அதே நேரத்தில், சுய தனிமைப்படுத்தல் என்பது, உங்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுவிட்டால், உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு கோவிட் தொற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
ஒருவர் எப்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டியிருக்கும்?
மேற்கூறப்பட்ட பயணச் சூழல்கள் தவிர்த்து, கோவிட் தொற்றிய ஒருவருடன், அவருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்படும் முன் நீங்கள் நேரம் செலவிட்ட துண்டானால், நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்.
ராபர்ட் கோச் நிறுவனத்தின் கருத்துப்படி, ஒருவருக்கு கோவிட் அறிகுறிகள் தோன்றுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே, கோவிட் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து 14 நாட்கள் வரை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு கோவிட் தொற்றக்கூடும்.
அறிகுறிகள் இல்லாதவர்களுக்கோ, இந்த காலகட்டம், கோவிட் பரிசோதனை செய்வதற்கு முந்தைய இரண்டு நாட்களிலிருந்து, கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்கள் வரை கணக்கிடப்படும்.
உங்கள் கொரோனா வார்ன் ஆப்பில், நீங்கள் கோவிட் தொற்றிய ஒருவருடன் உங்களுக்குத் தெரியாமலே தொடர்பிலிருந்ததாகச் சிவப்பு எச்சரிக்கை வந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள், என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
அதேபோல், உங்கள் துணைவர, துணைவி அல்லது குழந்தைக்கு கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், உள்ளூர் சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள், என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
இதற்கு விதிவிலக்கு ஏதாவது உள்ளதா?
ஆம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்குள் தங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்குள் கோவிட்லிருந்து விடுபட்டவர்கள் ஆகியோருக்கு இந்த தனிமைப்படுத்தலிலிருந்து விதிவிலக்கு உண்டு.
ஆனால், ஒருவர் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, கோவிட்லிருந்து விடுபட்டிருந்தாலும் சரி, அவர்களுக்கு கோவிட் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தங்களைக் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
எப்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும்?
அதிகாரப்பூர்வ அரசு ஆலோசனையின்படி, உங்களுக்கு ஜலதோஷ அறிகுறிகள் இருந்தாலோ, நீங்களாகவே செய்துகொண்ட கோவிட் பரிசோதனையில் உங்களுக்கு கோவிட் தொற்று இருப்பது தெரிந்தாலோ, நீங்கள் உங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், இது சட்டப்படி கட்டாயம் அல்ல! நீங்கள் ரிபிட் டெஸ்ட் முறையில் கோவிட் பரிசோதனை செய்து, அதில் உங்களுக்கு கோவிட் இருப்பதாகத் தெரியவந்தால், உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது அறிவுரையின் பேரில், பி.சி.ஆர் முறையில் மீண்டும் ஒரு கோவிட் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
பி.சி.ஆர் பரிசோதனையிலும் உங்களுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகும் நிலையில், சட்டப்படி நீங்கள் உங்களை உங்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் (மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தாலன்றி).
எவ்வளவு நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும்?
முன்பு, ஒருவர் தடுப்பூசி பெற்றவரா, அவருக்கு எந்த வகை கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது, என்பது போன்ற விடயங்களுக்கு ஏற்ப தனிமைப்படுத்தல் காலகட்டம் வெவ்வேறாக இருந்தது.
தற்போது, சுகாதாரத்துறை அமைச்சரான கேர்ள் லாடேர்பத் எளிய, புதிய விதி ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். நீங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சரி, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டாலும் சரி, நீங்கள் 10 நாட்களுக்கு மற்றவர்களைத் தொடர்புகொள்ளக்கூடாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை அல்லது உயர் தர அன்டிஜன் பரிசோதனை செய்து தங்களுக்கு கோவிட் இல்லை என உறுதி செய்யப்படுபவர்களுக்கு இந்த காலகட்டம் 7 நாட்களாகக் குறைக்கப்படும்.
சிறு பிள்ளைகளுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், இந்த விதிகளில் சற்று வித்தியாசம் உள்ளது. சிறு பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள், தொற்றுடைய ஒருவருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தால், அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அவர்கள், பி.சி.ஆர் பரிசோதனை அல்லது உயர் தர அன்டிஜன் பரிசோதனை செய்து, தங்களுக்கு கோவிட் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில் அவர்களது தனிமைப்படுத்தல் 5 நாட்களாகக் குறைக்கப்படும்.
அதே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சுகாதாரப் பணியாளர்களோ, 48 மணி நேரத்துக்கு அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லையென்றால், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கோவிட் இல்லை என உறுதி செய்துகொண்டால், அவர்கள், 7ஆவது நாள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம்.
இந்த புதிய விதிகள் எப்போது அமுலுக்கு வருகின்றன?
பெடரல் மட்டத்தில் விதிகள் கையெழுத்தாகிவிட்ட நிலையில், ஜேர்மனியின் 16
மாகாணங்களிலும் இந்த விதிகள் விரைவில் நடைமுறைப்பட உள்ளன. இது தொடர்பான
சந்தேகங்களை உங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.