புதிய நிதியமைச்சர் மகிந்த
புதிய அமைச்சரவையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களம் உட்பட பொலிஸ் துறை சம்பந்தப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய சரத் வீரசேகரவுக்கு அந்த அமைச்சு பதவி மீண்டும் வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவை இன்றோ அல்லது நாளை பிற்பகலோ பதவியேற்கும் என தெரியவருகிறது. எதிர்வரும் 11 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால்,அதற்கு முன்னர் நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இதனிடையே தற்காலிக அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நிலவும் அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள், மின் விநியோக துண்டிப்பு போன்ற காரணங்களால், கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள மக்கள் அரசாங்கத்திற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அமைச்சரவை கடந்த வாரம் ராஜினாமா செய்தது. பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தவிர ஏனையோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து அலி சப்றி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் பதவிப் பிரமாணம் செய்து மறுநாளே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.