பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சி! சந்தேகநபரின் பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யச் சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பையா பிரகாஷன் (தனுஷ்) என்பவரே பிணை பெற்றவராவார்.
வழக்குத் தாக்கல்
கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் மீது, முன்னாள் இராணுவத் தளபதி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடர்பாக 2012 செப்டம்பர் 20 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பிணை வழங்கிய நீதிமன்றம்
இந்த நிலையில், நீண்டகால விளக்கமறியல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 4 சரீரப் பிணைகளின் கீழ் இவருக்கு அண்மையில் பிணை வழங்கியது.
எனினும், இந்த பிணை உத்தரவுக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களம் மேன் முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் சந்தேகநபர் பிணையில் அனுமதிக்கப்பட்டால், அது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் சட்டமா அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.