‘‘கடந்த கால அனுபவமும் புதிய சூழலும் தேவைப்படும் புதிய அணுகுமுறையும்’’
கடந்த பத்தாண்டு கால இலங்கை அரசியலில் ஈழத்தமிழ்த் தரப்பும் இந்தியாவும் திட்டவட்டமான தோல்விகளை தழுவிக் கொண்டுள்ளது.
சிங்கள அரசு இப்படுகொலையுடன் கூடிய இராணுவவாத ஆட்சிக்குரிய உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்து இருக்கின்றது. கூடவே பெரும் சவால் விடவில்லை.
சீனப் பேரரசை அது அணைத்து இலங்கையில் சீனாவை அடிகோல வைத்துள்ளது.
1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அரசு பிரகடனப்படுத்திய போது இராணுவ தலைமைத் தளபதியாக இருந்தவர் ஒரு பிரிகேடியர் தர அதிகாரியே.
அப்போது இலங்கையில் இருந்த முப்படைகளின் தொகை சுமார் 12, 500ஐ தாண்டவில்லை. தற்போது முப்படைகளின் தொகை 3, 47,000 ஆகும்.
இக்காலகட்டத்தில் சுமாராக இரண்டு இலட்சத்துக்கு மேல் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டுள்ள நிலையில், சுமாராக 12 லட்சத்திற்கும் மேல் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
அத்தோடு தமிழினம், சிங்களப் படைகளினதும், சிங்கள ஆட்சியாளர்களினதும் காலடிகளில் வீழ்ந்துகிடக்க நேர்ந்துள்ளதுடன் அந்நிய நாடுகளின் தயவிற்கும் கருணைக்கும் கையேந்தி நிற்கின்றது.
கூடவே தக்க தலைமையற்ற நிலையில் அடி வருடும் சுயநலக் கும்பல்களின் கைகளில் மக்கள் பம்பரமாட்டப்படுகின்றனர்.
இவ்வகையில் தமிழினத்தின் தோல்வியுடன் கூடவே அண்டை நாட்டளவிலும் பிராந்திய அளவிலும் இந்தியாவினது தோல்வியும் அமைந்திருக்கிறது.
தமிழ் இனத்தின் தோல்வி இந்தியாவின் தோல்வியும் தான் என்பதை வரலாறு பிரகடனப்படுத்தி நிற்கின்றது.
ஆதலால் இந்தியாவும், ஈழத்தமிழரும் தமது தோல்விகளிலிருந்து மீண்டெழ புதிய வழிகளை கூட்டாக தேட வேண்டும்.
ஈழப்போரில் ஏன் தமிழினம் வெல்லமுடியாமல் போனது? பௌத்த பேரினவாதத்தால் எப்படி வெல்ல முடிந்தது? சிங்கள அரசினால் உலகளாவிய அரசுகளின் உதவியுடன் வகுக்கப்பட்ட சக்கர வியூகத்தை ஈழத்தமிழர்களால் ஏன் உடைக்க முடியாமற் போனது?.
தமிழினம் உள்ளும், புறமும் பலமாக இருந்தும் அளப்பெரும் தியாகங்களை மக்களும், போராளிகளும் செய்தபோதிலும் எதிரியினால் தொடர்ந்து எவ்வாறு தோற்கடிக்க முடிகிறது?
தோல்விகள் ஈழத்தமிழினத்தை துரத்துகின்றன. வெற்றிக்கான வழியைத்தேடத் தமிழினம் தனது தொடர் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்தறிய வேண்டும்.
அதற்கு தயாரில்லை என்றால் வெற்றிக்கான பயணம் என்றும் வெகுதொலைவிலேயே இருக்கும்.
கடந்த 12 ஆண்டு கால அரசியலில் தமிழ்த் தரப்பு இதற்கான சரியான பாதை வகுப்பை பற்றிச் சிறிதும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
இதற்கான முதல் அடியைக்கூட தமிழினம் இன்னும் எடுத்து வைக்கவில்லை. தமிழரிடம் தமது சூழலுக்கும், தமது தேவைகளுக்கும் பொருத்தமான அரசியல் அணுகுமுறையை மேற்கொள்ளவல்ல அறிவியல் வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்த் தலைமைகளிடமும், அமைப்புக்களிடமும் ஐக்கியத்துக்குப் பதிலாக பிரிந்து நின்று ஒருவருடன் ஒருவர் மோதுண்ணும் போட்டியும் ,பொறாமையும், சுயநலமுமே மேலோங்கியுள்ளது.
2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையகம் என்பது உண்மையில் அரசற்ற சமூகங்கள் தங்கள் குறைகளையும், வேதனைகளையும் அங்கு சென்று ஒப்பாரி வைத்து அழும் தாழ்வாரம் போன்றது.
அந்த தாழ்வாரத்தில் அழுவதன் மூலம், ஒப்பாரி வைப்பதன் மூலம் இந்த அரசற்ற சமூகங்கள் தங்களை உளவளப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அதாவது ஒடுக்கப்படும் மக்களுக்கான உளவளப்படுத்தல் (counselling) மேற்கொள்ளப்படும் ஒரு மையம் என்றே முதலில் இதனை மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக இவ்வாணையம் சக்தி வாய்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்று என்ற வகையில் அதனை சக்திவாய்ந்த நாடுகளுக்கு ஊடாக அணுகும் வித்தையை முதலில் தெரிந்தாக வேண்டும்.
ஐநா மனித உரிமை ஆணையகத்தின் ஊடாக வல்லரசுகள் அவ்வப்போது சமகால அரசியல் நிகழ்வுப் போக்கில் தங்களுடைய நலன்களை அடைவதற்கான தந்திரோபாயங்களை வகுத்து அதன் மூலம் தங்கள் நலன்களை பூர்த்தி செய்து கொள்வர்.
எனவே தமிழ்த் தரப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு ஒரு பலம்வாய்ந்த அரசின் உதவி தேவை.
இந்த ஆணையத்தை ஒரு ஊன்றுகோலாக பயன்படுத்தி ஐநா பொதுச் சபையை நோக்கி நகர்த்துவதற்கேற்ற அரசியல் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதே பொருத்தமானது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது பெரும் அழிவைத் தந்தது மாத்திரமல்ல. அது எதிரியை அம்பலப்படுத்துவதற்கான அடித்தளத்தையும் தந்துவிட்டுதான் சென்றது.
அதாவது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலையை சர்வதேச அரசியலில் முதலீடாக்கி அதன் ஊடாக தமிழர்கள் தமது தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பை அது தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
தமிழினப் படுகொலையை சர்வதேச வல்லரசுகள் தங்களிற்கான இந்து சமுத்திரம் சார்ந்த அரசியல், பொருளியல், நலனுக்காகத் தத்தம் கைகளில் எடுத்து அழுத்த தந்திரத்தை (pressure tactics) பயன்படுத்தி இலங்கை அரசை பணிய வைக்கவும், வளைய வைக்கவும் முயற்சி செய்கின்றன.
அவை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்மானத்தை நோக்கி முன்கொண்டு செல்ல முயலவில்லை.
இந்த அரசுகள் பயன்படுத்தும் மேற்படி அழுத்த தந்திரம் என்பது சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க உதவுமேயன்றி அதனை கடந்து அது தக்க அரசியல் தீர்மானத்தை நோக்கிச் செல்ல மாட்டாது.
இத்தகைய அழுத்த தந்திரோபாய நிலை தொடருமானால் பத்து வருடங்கள் என்ன நூறு வருடங்கள் சென்றாலும் இந்த நிலைதான் தொடரும்.
கடந்த 12 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஐநா நோக்கிய அனைத்துச் செயற்பாடுகளும் அப்படியே பழைய நிலையிலேயே உள்ளன. அவை தோல்வி அடைந்துள்ளன என்பதே உண்மையாகும்.
எனவே தமிழர் தரப்பை வெற்றியின் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரசுகளின் அவையான ஐநாவின் "வீட்டோ" அதிகாரமுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது நிழல் வீட்டோ அதிகாரம் உடையது என்று கருதப்படக்கூடிய உலக அரசியல் அரங்கில் செல்வாக்கு மிகுந்த இந்தியாவையோ தமிழர்கள் தெரிவு செய்து அதனூடாகவே நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த கால வரலாற்றில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது எனச் சொல்லப்படும் கம்போடியா, பர்மா, ஆர்மேனியா என்ற வரிசையில் இவை அனைத்திற்கும் வல்லரசுகளின் அனுசரணையும் ஆதரவும் இருந்தது.
வல்லரசுகளின் ஆதரவிலேயே அவர்கள் இனப்படுகொலை என்பதனை நிறுவி அதற்கான தீர்வினை நோக்கி முன்னேறினர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
வல்லரசுகளில் அதிகாரமுள்ள நாடுகளின் செல்வாக்கு இன்றி ஐநாவிலோ அன்றிச் சர்வதேச அரங்கிலோ அணுவும் அசையாது.
ஈழத் தமிழர்களின் முதலாவது தெரிவாக மேற்குலகம் சார்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை அணுக முடியும்.
அதற்கேற்ற வகையில் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு மில்லியன் வரையிலான தமிழர்களின் பலத்தை பயன்படுத்தி நாடுகளை அணுகுவதற்கான வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழர்களும் மேற்கொள்ள முடியும்.எனினும் மேற்குலகத்தினால் அழுத்தத்தையே தொடர்ந்து பிரயோகிக்க முடியும்.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளில் பெரும்பாலானவற்றை தம்பக்கம் திருப்புவதில் சிங்களப் பேரினவாதம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு பெருவல்லரசுகளையோ அல்லது பிராந்திய வல்லரசுகளையோ இலக்காகக் கொண்டு அவற்றை வென்றெடுப்பதற்காக செயற்படுவது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.
இலங்கை மீதான இந்தியாவின் அழுத்த தந்திரமும், இலங்கை மீது மேற்குலகிற்கு இருக்கக்கூடிய சீற்றமும் அதனால் அவை மேற்கொள்கின்ற அழுத்த தந்திரமும், அத்தோடு இலங்கை அரசு மேன்மேலும் சீன சார்பாக மாறுவதும் தமிழர் தரப்புக்கு வாய்ப்பான பல சாதகங்களை ஏற்படுத்தியிருக்கிறன.
மேற்குலகின் சீற்றத்துடன் கூடவே இந்தியாவையும் இவ்விவகாரத்தை கையில் எடுக்க வைப்பதற்கான முயற்சிகளை செய்தால் தான் இதனைத் தமிழ் மக்களின் நலனுக்குகந்த ஒரு அரசியல் தீர்மானமாக மாற்றி அமைத்திட முடியும்.
சர்வதேச அரங்கில் இதனை "இனப்படுகொலை" என்ற நிலைக்கு உயர்த்துவதற்கேற்ற வகையில் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக தமிழ் தலைமைகள் அதனை சரியான வழியில் முன்னெடுக்க வேண்டும்.
அதற்காக அவர்கள் உடனடியாக தமிழக தலைவர்களை முதலில் சந்திக்க வேண்டும். தமிழகத்தில் தங்கி நின்று ஆளுங்கட்சி பிரமுகர்கள், எதிர்க் கட்சிப் பிரமுகர்கள், தேசியக் கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகள் என தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனைக்கான ஆதரவினை கோர வேண்டும்.
தமிழக மக்களின் ஆதரவுடன் இந்திய மத்திய அரசினை இலங்கை விவகாரத்தில் தமிழர்ககளின் நீதிக்கான கோரிக்கைகளை முன்வைப்பதே இன்றுள்ள முதல்நிலைப் பணியாகும்.
செயல்பூர்வ அர்த்தத்தில் அவ்வாறு செய்யாமல் வெறும் அழகிய வார்த்தைகளும், அறிக்கைகளும், ஒப்பாரிகளும் எதனையும் சாதித்துவிடாது.
இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் என்பது உலக அரசுகளின் அரசியல், பொருளியல், இராணுவ நலன்களையும், அதிகார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ஒரு பிராந்தியம் ஆகும்.
உலகளாவிய வர்த்தகத்தின் மையமாகவும், மேற்கு - கிழக்கு போக்கு வரத்தும் இந்து சமுத்திரத்தின் உள்ளேயே நிகழ்கிறது. எனவே உலகளாவிய அனைத்து வகையான போக்குகளுக்கும் இந்து சமுத்திரம் உட்பட்டதாகவே காணப்படுகிறது.
ஈழத் தமிழரைப் பொறுத்தவரை புவிசார் அரசியல் (Geopolitics) எனப்படுவது இந்திய உபகண்டம் சார்ந்த அரசியலாகும். பூகோள அரசியல் (Global Politics) எனப்படுவது பரந்த பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட ஆதிக்க வல்லரசுகளின் அரசியலாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நலன்களும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தற்போது மையம் கொண்டுள்ளது. இந் நிலையில் வெளிநாட்டுச் சக்திகளை கையாள்வதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனையையும், பூகோள அரசியல் சக்திகளை கையாள்வதன் மூலம் இந்திய உபகண்டம் சார்ந்த பூவிசார் அரசியல் பிரச்சனையையும் வெற்றி கொள்வதற்கான வித்தையை இலங்கை ஆட்சியாளர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
புவிசார் அரசியலில் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அடங்கும் ஒரு தீவு. அத்தோடு இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பலம் பொருந்திய அளவால் பெரிய ஜனநாயக நாடு.
ஆனால் புவியியல் அடிப்படையில் சீனா இந்து சமுத்திரப் பிராந்திய நாடல்ல. அது தனது பொருளாதாரத்தை பயன்படுத்தி அரசியற்புவியியல் ( Political Geography ) ஊடாக இந்து சமுத்திரத்துள் நுழைந்திருக்கும் ஒரு பெரு வல்லரசு. இத்தகைய சீனாவின் நுழைவை இந்தியா, அமெரிக்கா உட்பட உலகில் சக்தி படைத்த பெரும்பான்மை நாடுகள் விரும்பவில்லை
அந்த வகையில் இந்தியாவை தமிழர் பக்கம் திருப்புவது தமிழருக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில் இந்தியா எதிர்க்கின்ற அல்லது ஆதரவு அளிக்காத, அனுசரணை அளிக்காத எதனையும் தமிழர் தரப்பால் அடைய முடியாது என்ற நிலையே புவிசார் அரசியலிலும் சரி பன்னாட்டு அரசியலிலும் சரி காணப்படுகிறது.
தமக்கு சாதகமான அரசியல் உறவுகளை வலுப்படுத்தாமல் எவராலும் அரசியல் வெற்றிகளை ஈட்ட முடியாது. இந்த வகையில் ஈழத்தமிழர்கள் கற்பனைகளையும், முகற்பிதங்களையும் கடந்து தமக்கு பொருத்தமான காலதேசவர்த்தமான உறவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு பலம்வாய்ந்த அரசின் நேரடி ஆதரவின்றி சர்வதேச அரசாங்கத்தில் இனப்படுகொலைக்கு எதிரான எத்தகைய நீதி விசாரணைகளையும் தமிழீழ மக்களால் ஒரு போதும் முன்னெடுக்க முடியாது.
அந்த அரசு எது என்ற கேள்விக்கு முதலில் தாயகத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், புலம்பெயர் மக்களும் முடிவெடுக்க வேண்டும்.
இந்தியா என்கின்ற போது தமிழக மக்களும் அதனுள்ளேயே உள்ளடங்குகின்றனர். எனவே தமிழகத்தின் 8 கோடி தொப்புள் கொடி உறவுகளின் ஆதரவை கட்சி பேதங்களைக் கடந்து ஈழத்தமிழ் மக்கள் திரட்டுவதன் மூலமே இந்தியாவை தன் பக்கம் திருப்ப முடியும்.
அத்தோடு இந்தியா சார்ந்த புவிசார் மற்றும் இந்து சமுத்திர அரசியல் தேவைகளின் நிமித்தமும், ஈழத் தமிழர் பக்கம் இந்தியா சாய வேண்டிய அவசியமும் உண்டு.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்றும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி தமிழக சட்ட சபையில் கட்சி பேதமின்றி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இந்த இடத்தில் கருத்திற்கொள்வது அவசியம்.
எனவே தமிழ்த் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தி இந்திய மத்திய அரசை தம்பக்கம் திருப்புவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க இடமுண்டு.
அரசியல் என்பது நிர்ப்பந்தம். எனவே இந்திய மத்திய அரசை தமிழகம் வாயிலான ஒரு நிர்பந்த வளையத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு சாதகமான தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும். அத்துடன் இந்தியாவின் பொருளாதார, அரசியல், கடல்சார் பாதுகாப்பு மூலோபாய நிலப் பரப்பாய், இந்தியப் பேரரசின் இயங்கு சக்தியான இருதயப் பகுதி நிலமாய் தமிழகத்தை காணமுடிகிறது.
இந்த வகையில் தமிழகத்தை அனுசரித்து நடக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு அடிப்படையானது. இதனை இந்திய எதிர்ப்பு அரசியல் மூலம் சாதிக்க முடியாது.
இதில் பரஸ்பர நன்மைகளை முன்னிட்டு ஈழத்தமிழர்களும், தமிழகமும், இந்திய அரசும் ஒரு புள்ளிகள் சந்தித்து நாகரீகமான அரசியல் பாதையில் முன்னேற வேண்டும்.
தமிழர் தரப்பில் இந்தியாவை தெரிவு செய்து, சர்வதேச அரசியலில் முன்னோக்கி நகர்வது என்பதில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களும் தோன்றலாம். குறிப்பாக கடந்த 12 ஆண்டுகால அனுபவத்தில் இந்தியாவை விடுத்து தமிழர்களால் எதனையும் அடையக் கூடியதாக இருந்ததா? என்றால் இல்லை என்றே பதில்வரும் .
சீன சார்பு வாதக் கொள்கையை முன்வைப்போர் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளவேண்டும். தலா 99 வருட ஒப்பந்தத்திற்கு இலங்கையின் இரண்டு துறைமுகங்களை அபகரித்துள்ள சீனா, ஒரு போதும் சிங்கள அரசுக்கு எதிராக தமிழர் பக்கம் திரும்ப முடியாது.
அதேவேளை அம்பானி குழுமத்திடம் கொழும்பின் மேற்கு முனையத்தை இலங்கை அரசு 99 வருட ஒப்பந்த அடிப்படையில் கையளித்திருக்கிறது.
இதன் உண்மையான இராஜதந்திர இலக்கு என்னவெனில் இந்திய - அமெரிக்க கூட்டுடன் இலங்கையில் சீன எதிர்ப்பு பலமுறும் பின்னணியில் அதனை தணித்து இலங்கையிலுள்ள சீனாவின் 2 ஒப்பந்த துறைமுக நகரங்களையும் சீனா பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தை பெறவேண்டும் என்பதாகும்.
இத்தகைய உள்நோக்கிலான இராஜதந்திர இலக்கு சில வருடங்களில் அம்பலப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த காலத்தில் இந்தியா - ஈழத் தமிழர் என்ற இரு தரப்பிலும் பரஸ்பரம் தவறுகள் இருந்திருக்கலாம். நடைமுறை அனுபவத்திற் கூடாக தவறுகளை புரிந்துகொண்டு அதைத் திருத்தி சூழலுக்கேற்ப புதிய உறவை வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே இன்று இருக்கின்ற இந்து சமுத்திரத்தின் கொதிநிலையை மிக நுணுக்கமாக கற்றறிந்து, அதில் இருக்கக்கூடிய வாய்ப்புக்களை ஆராய்ந்து, அதற்கேற்ப தமக்கு சாதகமான நகர்வுகளை ஈழத்தமிழர் தரப்பு மேற்கொள்ள வேண்டும்.
இந்தவகையில் புதிய சிந்தனையுடன் நகர்வதற்கேற்ற மனப்பாங்கை முதலில் ஈழத் தமிழர் தரப்பு உருவாக்கிககொள்ள வேண்டியது அவசியம்.
- தி.திபாகரன் -