உண்மையான புதிய கல்விச் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரசாங்கம் எதிர்வரும் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறுகிறது. இன்றைய திகதி வரை புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான முழுமையான எழுத்து மூல ஆவணம் வெளியிடப்படாத நிலையில் இதைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இதன் உள்ளடக்கமாக பயிற்சி மையக்கல்வி முறை, பாடத்திட்ட மதிப்பீட்டு மாற்றங்கள், தொழிற்கல்வி, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றன உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
கணினி மென்பொருள் விளக்கக் காட்சியை (Power point presentation) முக்கிய ஆவணமாக வைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மகாநாயக்கர்கள் என முன்வைப்புகள் நடந்து வருகின்றன.
கல்விச் சீர்திருத்தம்
பல தரப்பினர்கள் கணினி மென்பொருள் விளக்கக் காட்சி போதுமானது அல்ல என்றும், விரிவான எழுத்து மூல ஆவணம் அவசியம் வெளியிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சரின் விளக்கம், குறைபாடுகள் உடையதாக இருக்கிறது என அதிபர் ஆசிரிய தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் கருத்தோடு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உடன்படுகிறது. புதிய வருடத்திற்கு இன்னும் குறுகிய காலம் இருக்கின்ற நிலையில் எழுத்து மூல ஆவணத்தை இன்னும் வெளியிடாமல் கணினி மென்பொருள் விளக்கக் காட்சியை மட்டும் வைத்து விளங்கப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மிக விரைவில் எழுத்து மூலம் ஆவணம் சகலருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் உள்ளடக்கத்தை அவதானிக்கும் போது 2023 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் காலத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை உருவரைச் சட்டகத்தில் உள்ள அம்சங்களையும் 21ம் நூற்றாண்டின் கல்விச் சீர்திருத்தங்கள் எனும் தலைப்பில் 2016 ஆம் ஆண்டு கலாநிதி உபாலி சேதர என்பவரால் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களினதும் உள்ளடக்கங்களே கல்வி அமைச்சர் ஹரிணியின் கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற கல்வி சீர்திருத்தம் எவ்வாறு புதிய கல்வி சீர்திருத்தமாகும் என்ற கேள்வியை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எழுப்பியுள்ளது. புதிய அரசாங்கம் பழைய அரசாங்கங்களைப் போன்றே நவ தாராள முதலாளித்துவப் பாதையான தனியார்மய, தாராளமயப் பாதையில் பயணிக்கின்றது.
கல்விச் சீர்திருத்தமும் அந்த கொள்கைகளுக்கு ஏற்றதாகவே அமையும் அதன்படி தனியார் முதலீட்டு தொழிற் துறைகளுக்கு ஊழியர் படையை விற்பனை செய்வதை பிரதான இலக்காகக் கொண்ட சீர்த்திருத்தம் என்பது தெளிவாக தெரிகிறது. தொழிற் கல்வி நாட்டிற்கு தேவை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
அதே நேரம் சமூக விழுமியங்கள், மனித நேய சிந்தனை, சூழல் பற்றிய அக்கறை, கலை இலக்கிய ஆர்வமற்ற, ஆளுமை அற்ற மனித ரோபோக்களை உருவாக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நாம் நிராகரித்து எதிர்க்கின்றோம்.
சாதாரணத் தரத்தில் மையப் பாடங்கள் பட்டியலில் இருந்து வரலாறு பாடம் எடுக்கப்பட்டு தெரிவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் பின்னணி சமூகப் பார்வை, அரசியல் மற்றும் கடந்த காலத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்கள் தெரியாத ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்திற்கு என்றே கருத வேண்டி உள்ளது.
ஆனால் வரலாறு போன்ற பாடங்களின் பாடக்கொள்கை மற்றும் பாடத்திட்டத்தில் நிச்சயம் மாற்றங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் நிறைவுப் பெற சில மாதங்களே இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் ஆறாம் தர பிள்ளைகளை பரிசோதனை எலிகளாக பரீட்சித்துப் பார்க்க நாம் இடமளிக்க கூடாது.மிக அவசரமாகவும் தடாலடியாகவும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, மிக பாதிப்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பொருளாதார நடவடிக்கைகள்
அமைச்சு மட்டம் முதல் வலய, கோட்ட மட்டம் வரை பொருத்தமான புதிய கல்விச் சீர்திருத்தத்தை வடிவமைப்பதற்கு ஆர்வத்தை கொண்டுள்ள கல்வியியலாளர்கள், உளவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், இயற்கை சூழல் மீதான அக்கறையாளர்கள், சிந்தனையாளர்கள் என்ற பல்வேறு மட்ட சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆலோசனை அமைப்புகளை உருவாக்கி விரிவான உரையாடல்களை நடாத்தி அவற்றை தொகுத்து இறுதி முடிவை எடுக்கக்கூடிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முன் வைக்கிறது.
நாட்டின் கல்வித்துறைக்கு கடன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகிய அமைப்புகளின் தலையீடு அற்ற தேசிய நலன்களை முதன்மைப்படுத்தும் கல்விச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
எமது நாடு விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட நாடு மீன்பிடி,உணவு உற்பத்தி பயிர்கள், பாற்பன்னை, சிறு கைத்தொழில்கள் போன்ற இன்னும் பிற பொருளாதார நடவடிக்கைகள் கல்வியோடும் எமது தொழிற் படையோடும் தொடர்பு படுத்தப்பட வேண்டும்.
எமது வளங்களையும் இயற்கை சூழலையும் பயன்படுத்தி பாதுகாப்பதே முன்னேற்றமாகும். மேலும் உண்மையான இன நல்லிணக்கம் மற்றும் மனித வேறுபாடுகளை அங்கீகரித்தல், மதித்தல், ஒன்றிணைந்து வாழ்தல் போன்ற பண்பாட்டு வளர்ச்சி உள்ள மனித சமூகத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டிருப்பதான கல்விக் கொள்கையும் நடைமுறையும் அமைதல் வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
