சஜித் ஆட்சியின் கீழ் புதிய அரசமைப்பு: வழங்கப்பட்டுள்ள உறுதி
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசு அமையப்பெற்று முதல் மூன்று மாதங்களுக்குள் இதற்குரிய பணி ஆரம்பிக்கப்பட்டு விரைவில் அது முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பல திருத்தங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசமைப்புக்குப் பதிலாக புதியதொரு அரசமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
நாடாளுமன்றத்தின் பலம்
புதிய அரசமைப்பை இயற்றும் பணியை மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆரம்பித்து, சட்டமூலம் தயாரிக்கும் பணியை கூடிய விரைவில் முடிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி குழுவொன்று அமைக்கப்பட்டு இதற்குரிய பணி இடம்பெறும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதற்காக எமது கட்சி தலைவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார். ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். நாடாளுமன்றத்தின் பலமும் கிடைக்கப்பெறும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், நீதித்துறையை வலுப்படுத்தல், மக்களின் அடிப்படை உரிமைகள், கலாசார உரிமைகள், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்பு அமையும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |