போக்குவரத்துச் சபைக்கு புதிய தலைவர் நியமித்த பந்துல!
போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் பதவி விலக மறுத்து வரும் நிலையில் புதிய தலைவர் ஒருவரை அமைச்சர் பந்துல குணவர்த்தன நியமித்துள்ளார்.
இன்று (09.12.2022) இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சன நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த காலத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையினால் சிட்டி ரைடர் எனும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் போக்குவரத்துச் சபைக்கு தலைவராக சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக நியமனம் செய்யப்பட்ட பின் போக்குவரத்து அமைச்சு அல்லது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் யாருடனும் கலந்தாலோசிக்காமல் சிட்டி ரைடர் பேருந்து சேவையை அவர் தன்னிச்சையாக ரத்துச் செய்திருந்தார்.
ராஜினாமா செய்யப் போவதில்லை
இந்த விடயம் தற்போதைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்குக் காரணமான போக்குவரத்துச் சபை தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு வெகுசனத் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டிருந்தார்.
எனினும் போக்குவரத்துச் சபை என்பது அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் வீட்டுச் சொத்து அல்ல என்று விமர்சனம் தெரிவித்திருந்த அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக, தான் ஒருபோதும் பதவியை ராஜினாமாச் செய்யப் போவதில்லை என்று காட்டமாகத் தெரிவித்திருந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் போக்குவரத்துச் சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் எஸ்.எம்.டீ.எல்.கே.டீ. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் ஒருகாலத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.
அவருக்கான நியமனம் கடிதம் இன்று காலை போக்குவரத்து அமைச்சில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் போது போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆர்.டப்.ஆர். பிரேமசிறியும் சமூமளித்திருந்தார்.
