புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடக்குமுறையை மீண்டும் உருவாக்கும்: HRW எச்சரிக்கை
இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அல்லது உத்தேச அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
2025 டிசம்பரில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த யோசனை தற்போதைய சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவுள்ளது.
ஆனால், இந்தப் புதிய சட்டத்திலும் பழைய சட்டத்தைப் போன்றே மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் ஆபத்தான பிரிவுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம்
இந்த யோசனையில், பயங்கரவாதம் என்பதற்கான விளக்கம் மிகவும் விரிவாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளது. இது அரசியல் செயல்பாடுகள் மற்றும் அமைதியான போராட்டங்களை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம்.

அத்துடன், அரச வற்புறுத்துதல் அல்லது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற பொதுவான செயல்களும் பயங்கரவாதமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. ஒரு சந்தேகநபரை ஒரு வருடம் வரை நீதிமன்ற விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்க இந்தப் புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது.
பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், இந்தத் தடுப்புக்காவலை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கவும் முடியும். இராணுத்தினர் பிடியாணை இன்றி யாரையும் நிறுத்தவும், சோதனையிடவும், கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வலியுறுத்தல்
இந்த நிலையில், இராணுவத்திற்குப் பயங்கரவாதத் தடுப்புப் பணிகளில் இத்தகைய அதிகாரங்களை வழங்குவது துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது.
தவறான அல்லது பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையிலான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த யோசனை வழிவகுக்கின்றது.

குறிப்பிட்ட இடங்களைப் தடை செய்யப்பட்ட இடங்கள் என அறிவிக்க முடியும். அத்துடன் அங்கு புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த நிலையில், இலங்கை அரசு சர்வதேச அமைப்புகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைகளுக்காக அளித்த மனித உரிமை வாக்குறுதிகளை இந்தச் சட்டம் மீறுவதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்கவும், புதிய சட்டத்தை உருவாக்கும் போது பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
