ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் எச்சரிக்கும் நெதன்யாகூ
ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதோ அல்லது தங்களது நட்பு நாடுகள் மீதோ நேரடியாகவோ அல்லது பிற அமைப்புகள் மூலமாகவோ ஈரானால் தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலும் ஒரு "பயங்கரமான தவறு" ஆக அமையும் என்றும், அதற்கு "மிக மிகக் கடுமையான" பதிலடி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் ஈரானிய அரசு வீழ வேண்டும் அல்லது "பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதையும்" சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது "தாக்குதல் நடத்துவதையும்" ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை மூலமாகவோ அல்லது அது இல்லாமலோ ஈரானின் அணுசக்தி திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவுடனான தூதரக உறவை முறைப்படுத்துவதற்கு பதிலாக, சவுதிக்கு ராணுவ அணுசக்தி திட்டத்திற்குப் பதில் 'சிவிலியன்' அணுசக்தி திட்டத்தை அனுமதிக்கும் டிரம்பின் நிபந்தனையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எல்லைப்பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை 8 முதல் 13 கிலோமீட்டர் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்த சுமார் 1,50,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளில் 94 சதவீதத்தை இஸ்ரேலியப் படைகள் அழித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான புதிய முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, லெபனான் அரசு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், இஸ்ரேல் லெபனானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் எனகுறிப்பிட்டுள்ளார்.
எனினும் லெபனான் இராணுவத்தால் அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை "பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனவும், அதற்கு ஒரு வாய்ப்பளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது லெபனானின் சுமார் 6 சதவீத நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கு தீவிரமடைந்துள்ள தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.