இஸ்ரேல் பிரதமர் குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் மறைமுகமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - காசா போரின் போது அவர்கள் நடத்திய போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இந்நிலையிலேயே நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து பொலிஸார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால், உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும்.
நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நோர்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்கப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |